×

விழுப்புரம் புறவழிச்சாலையில் ₹22 கோடி செலவில் உருவாகிறது விபத்துகளை தடுக்க உயர்மட்ட மேம்பால பணிகள் துவக்கம்

* போக்குவரத்து சீரமைப்பு குறித்து போலீசார் ஆய்வு

விழுப்புரம் : விழுப்புரம் புறவழிச்சாலையில் விபத்துகளை குறைக்கும் வகையில் ரூ.22 கோடியில் 3 இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதனிடையே மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கியதால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் செல்ல காவல்துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் அதிக தேசிய நெடுஞ்சாலைகளைக்கொண்ட மாவட்டமாக விழுப்புரம் இருந்து வருகிறது. அதற்கேற்ப விபத்துகளிலும் முன்னிலையில் இருந்து வருகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய சென்னை – திருச்சி செல்லும் நான்குவழி சாலையில்தான் இந்த விபத்துகள் அதிகளவில் நடக்கின்றன. இதனை தடுக்கும் வகையில் விபத்துகள் ஏற்படும் பகுதியில் ஒளிரும் மின்விளக்குகள், ராட்சத பேரிகார்டுகள் வைத்து விபத்துகளை சற்று குறைத்தனர்.

இருப்பினும் நிரந்தரதீர்வு ஏற்படும் வகையில் முக்கிய கிராசிங் பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் கட்ட வேண்டுமென கோரிக்கை எழுந்தது. அதனடிப்படையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டு, செஞ்சி புறவழிச்சாலை, விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் புறவழிச்சாலை ஆகிய 3 இடங்களில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்காக ரூ.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன்படி முதலில் செஞ்சி புறவழிச்சாலை உயர்மட்டமேம்பாலப்பணிகள் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வந்தள்ளது. அடுத்தகட்டமாக கூட்டேரிப்பட்டு உயர்மட்ட மேம்பாலப்பணிகள் 70சதவீத்திற்கு மேல்முடிவடைந்து இன்னும் ஓரிருமாதத்தில் பயன்பாட்டிற்கு வரஉள்ளது. அடுத்தகட்டமாக தற்போது விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் புறவழிச்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கியது. முதலில் இருபுறமும் வாகனங்கள் எளிதாக சென்று வர சர்வீஸ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது பண்டிகை நாட்கள் வரவுள்ள நிலையில் அதிகளவிலான வாகனங்கள் சென்று வரும்என்பதால் நெரிசலின்றி வாகனங்கள் செல்லவும், விபத்துகளை தடுக்கும் வகையில் நேற்று எஸ்பி சஷாங்சாய் உத்தரவின்பேரில் போக்குவரத்து காவல்நிலைய இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போலீசார் பேரிகார்டுகளை வைத்து வாகனங்களின் வேகத்தை குறைத்து இயக்கவும், மாற்றுவழிகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து போக்குவரத்து காவல்துறையினர் கூறுகையில், உயர்மட்ட மேம்பாலப்பணிகளால் திருச்சி மார்க்கத்திலிருந்து விழுப்புரம் நகருக்கு வரும் வாகனங்கள் ஜானகிபுரம் வழியாக நகருக்குள் வரவேண்டும். மற்றபடி கார், இருசக்கரவாகனங்கள் எல்லீஸ்சத்திரம் சாலைவழியாக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை மார்க்கத்திலிருந்து வரும் வாகனங்களும் எளிதாக சர்வீஸ்சாலையில் செல்லும்வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் திரும்புவதற்கு சென்டர்மீடியன் கட்டைகளும் இடித்து எளிதாக சென்றுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே எஸ்பி நேரில்ஆய்வு செய்துவிட்டுச்சென்றுள்ளார். விபத்துகளை குறைக்கவும், வாகன நெரிசலின்றி செல்லவும் ஆலோசனை வழங்கியதன்பேரில் அதனை செயல்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒரே நேரத்தில் சாலையின் இருபுறமும் பாலங்கள் அமைத்தால் போக்குவரத்து நெரிசல்அதிகரிக்கும் என்பதால், சென்னை மார்க்கத்தில் முதலில் பால பணி முடிவடைந்தபிறகு, அடுத்ததாக மற்றொருபகுதியில் பணிகள் துவங்கும்.

ஏற்கனவே செஞ்சி புறவழிச்சாலையில் பாலம் கட்டுமான பணி இருபுறங்களிலும் ஒரேநேரத்தில் துவங்கியதால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தமுடியவில்லை. இதனால் தற்போது ஒருபக்கத்தில் முடிவடைந்து அதில் வாகனம் செல்லவும், பின்னர் மற்றொரு பக்கத்தில் அடுத்த கட்டமாக பணிகள் துவங்கி நடைபெற அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

The post விழுப்புரம் புறவழிச்சாலையில் ₹22 கோடி செலவில் உருவாகிறது விபத்துகளை தடுக்க உயர்மட்ட மேம்பால பணிகள் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Vilapuram ,Viluppuram ,
× RELATED மனித மலம் கலக்கப்பட்டதாக கூறப்பட்ட...